Wednesday, 18 July 2018

Ulaganeethi -Never spend a day without learning


உலகநாதர் இயற்றிய உலகநீதி

பாடல் : 1


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றுவாய் மனமே.


English Translation


Never spend a day without learning.
Do not speak ill of others.
Do not ever forget your mother.
Do not befriend devious people.
Do not visit places if ill-repute.
Do not slander one to his back.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount.


பாடல் : 2


நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


தெரிந்தே பொய் கூறக்கூடாது. நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மனமே! மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation

Do not utter lies knowingly.
Do not establish transient actions.
Do not associate with people of poisonous mind
Do not befriend people with different ideals.
Do not venture alone into lonely places
Do not cause other’s downfall
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 3


மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்


மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது. கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது. மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation

Do not give in to your desires
Do not trust a stranger as a relative.
Do not bury your wealth without enjoying its fruits.
Do not forget to perform charity.
Do not attract trouble by being angry.
Do not visit those cannot control anger
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 4

குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்


பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது. ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. மனமே! வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not always criticize others.
Do not associate with robbers and murderers.
Do not degrade the learned.
Do not lust after chaste women.
Do not antagonise those in power.
Do not live in areas that lack a place of worship.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount.


பாடல் : 5


வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்

மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது. கீழானவர்களோடு சேரக்கூடாது. அவர்களைக் குறை கூறக் கூடாது. மனமே! பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not abandon the woman you married
Do not castigate your wife.
Do not commit sinful act
Do not turn tail in a battle field.
Do not join with people of low ideals.
Do not insult those fallen on hard times.
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 6


வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே



விளக்கம்


பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது. அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது. கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. மனமே! வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.



English Translation


Do not follow those who are foul mouthed
Do not visit the home of those who do not value you
Do not forget the advice of the elderly.
Do not associate with those with short temper
Do not hold back your teacher’s due
Do not associate with robbers.
Praise the God who has Valli as his consort
And holds the spear in his hands


பாடல் : 6


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.


விளக்கம்

எண்ணித் திட்டமிடாமல் கார்யங்களை செய்யக் கூடாது. நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது. போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது. இரண்டாம் மணம் புரியக் கூடாது. எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது. நெஞ்சே! தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று.


English Translation

Investigate before engaging
Do not offer false account
Do not get involved in your eneny’s war
Do not live in an area of common ownership
Do not wish for two wives
Do not develop enmity with the weak.
Praise the feet of Lord Kumaravel,
Guardian of forest, saviour of the poor.


பாடல் : 7

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நமக்கு வேண்டியவர்களை அலக்ஷ்யமாய்ப் பேசக்கூடாது. பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது. கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது. நெஞ்சே! பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation

Do not befriend people not fit to be seen with.
Do not forget those who have helped you.
Do not go about telling tales
Do not ignore those who trust you
Do not abandon noble acts
Do not be a slave to those who cause trouble
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 8


மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.


விளக்கம்


நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது. நம் துயரை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது. பார்க்காத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது. பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது. கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது. நெஞ்சே! உலகளந்த விஷ்ணுவின் தங்கையான உமையாளின் மைந்தன், மயிலேறும் நம் தலைவன் முருகப் பெருமானைப் போற்று.


English Translation

Do not condemn the land you are standing on.
Do not quarrel with everyone due to frustration.
Do not hurt others by losing kindness.
Do not bear false witness
Do not use words to hurt others
Do not associate with those who backbite
Praise the son of Uma who is the sister of Vishnu
The One who has peacock as his mount



பாடல் : 9

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே


விளக்கம்


வீண்பேச்சு பேசி வலுச்சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது. பொய் சாக்ஷி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக்கூடாது. மனமே! குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய்.


English Translation


Do not associate with immoral men.
Do not argue to maintain lies.
Do not threaten to show off your strength.
Do not forget the divine
Do not tell lies even when faced with death.
Do not visit relatives who don’t respect you.
He who has taken Kuraththi Valli as his consort
Speak his name of Kumaravel, Oh my heart!


பாடல் : 11

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.


விளக்கம்

ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. வண்ணான், க்ஷவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்யார், ப்ரஸவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?


English Translation

Do not deprive the wages of five groups of people
Listen, when I say who these groups are.
The wages of washer men and hairdresser.
The wages of the teacher who taught you all.
The wages of the midwife who cut the umbilical chord.
The wages of the physician who saved you from pain.
What kind of fate will they have to face
who don’t pay them with a pleasant word.


பாடல் : 12

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே


விளக்கம்

ஒரு குடும்பத்தைப் பிளவு செய்து கெடுக்கக் கூடாது. கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே வேலையாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு கூடாது. தெய்வத்தை இகழக்கூடாது. பெரியோரை வெறுக்கக் கூடாது. நெஞ்சே! குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.


English Translation


Do not cause separation of families
Do not take a flower that does not belong to you
Do not interfere with malicious intent
Do not befriend men of vicious nature
Do not belittle the almighty
Do not hate men of spiritual attainment
Praise the God who has Valli as his consort
and peacock as his mount


பாடல் : 13 

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.


விளக்கம்

பலரைப் போற்றி, பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன். இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம் உள்ளளவும் களிப்போடும், புகழோடும் வாழ்வார்களாக.


English Translation


To praise Lord Arumugan in sacred Tamil verse
Ulakanathan who earned his wealth by fair means
Sang these verses on natural justice
with knowledge induced by the grace of God
Those who loved it, learnt it and listened to it
will live with happiness everyday.
They will gain wealth and adulation
As long as the earth exists.

1 comment: