Wednesday 8 February 2017

ஒபிஎஸ் மனிதனாக



பந்தா இல்லை;
பரிவாரங்கள் இல்லை.
இவர் மீது ஊழல் வழக்குகள் இல்லை;
சிறை சென்றதும் இல்லை.

கலைஞர், புரட்சித்தலைவர், என்பது போல், இவருக்கு பட்டங்கள் இல்லை;கவுரவ டாக்டர் பட்டமும் இல்லை.

சரி, என்ன இருக்கிறது?
பட்டதாரி முதல்வர்;
கிராமத்து விவசாயியின் மகன்.

இந்தியாவில் சிறந்த நிர்வாகி என போற்றப்படும் .
அம்மா அவர்களால் , ஏற்கனவே,
இரு முறை முதல்வர் பதவிக்கு அடையாளம் காட்பட்டவர்.
ஒரு முறை அவருடைய  இலாகாக்களை கவனித்தவர்.

நிர்வாகம் எப்படி ??
இவர் முதல்வராக இருந்த போது, மதக்கலவரங்கள், ஜாதி கலவரங்கள் நடந்திருக்கிறதா?
சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா?

தமிழகத்தை உலுக்கிய, அம்மா  மரண சம்பவத்தின் போது, முதல்வராக இவர் தானே காவல் துறையை கவனித்தார்.
எந்த அசம்பாவிதமும்,தமிழகத்தில் நடக்கவில்லையே?

புயல் மழைக்கு, சேதங்களை பார்க்க உடனடியாக புறப்பட்டார்.
முழங்கால் அளவு தண்ணீரில்,
நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

ஊடகங்களில் தகவல் பரிமாற, அமைச்சர்கள்,
அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறார்.

சற்றும் தாமதமின்றி,கடிதங்கள் எழுதி காத்திருக்காமல், அடுத்த சில நாட்களில், மத்திய அரசின் நிதி கேட்டு பிரதமரை சந்தித்தார்.

அரசின் பாடங்கள் பயிற்றுவித்தவர்
அம்மா தானே!

நம் மாநிலத்தில் முதல்வர் விடுமுறை நாளிலும்  தலைமை செயலகம் வருகிறார்.
அதிகாரிகள்,மாற்று கட்சியினர் எளிதில் சந்திக்கலாம், விவாதிக்கலாம்.
ஐ.ஏ.எஸ்.,க்களுக்கும்,
ஆட்சி பீடத்திற்குமான இடைவெளிகளை
அகற்றி விட்டார்;
தினமும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன.

முதல்வர் என்பவர் அரசின் ஊழியர்;
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அரசு ஊழியர் போல் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

முதல்வர் காரிலேயே, அமைச்சர்கள் கூடவே செல்லலாம்.
கேரளா, ஆந்திரா, குஜராத், டில்லி போன்ற மாநிலங்களில் இப்படித்தானே நடக்கிறது.
அதை எல்லாம் பாராட்டும் ஊடகங்கள், அது முதல்வர் பன்னீர் என்கிற போது, கண்டும் காணாது இருக்கின்றன.

தலைமை செயலர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அப்போதும்,
அங்கே இருந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
இது பற்றி இதுவரை, அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
அவர் முதல்வர் என்ற பதவியை பயன்படுத்தி,
ராமமோகன ராவ் மீதான
ரெய்டு நடவடிக்கையை தடுத்தாரா? இல்லையே!
சட்டம் அதன் கடமையை செய்யட்டும் என்று இருந்தார்.
அது, அவருடைய பாணி.

உடனடியாக, புதிய தலைமை செயலர் நியமனம் ஆகட்டும்; யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் பணிந்தாரா? இல்லையே!
பணிமூப்பு அடிப்படையில் தான்,
புதிய தலைமை செயலரை நியமித்தார்.

இப்படி, முதல்வர் பன்னீரின் ஆட்சியில், மக்கள் யாரும் குறை காணவில்லை;

இப்படி ஆட்சி நடந்தால் போதும் ... எனவே, எம்.எல்.ஏ.,க்களே, அமைச்சர்களே...
கொஞ்சம் பொறுத்திருங்கள் ...
முதல்வர் பன்னீருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
அவரை நான்கரை ஆண்டுகள் ஆளவிடுங்கள்.
தமிழகம் வளர்ச்சியின் பாதைக்கு செல்ல வழிவிடுங்கள்.

அம்மா முதல்வராக வேண்டும் என்று மக்கள் ஓட்டளித்தனர். இன்னும் இருக்கும் நான்கரை ஆண்டுகள், அவரின் விசுவாசி,
அவர் ஒரு முறை கூட அமைச்சர் பதவியில் இருந்து நீக்காத, கட்சியை விட்டு நீக்காத,
பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும் .

என்று தான் மக்களும்,
உண்மையான அ.தி.மு.க., தொண்டர்களும் விரும்புகின்றனர் .......


ஓபிஎஸ் வடிவில்’ மோடி பேசியிருக்கிறார் :-


ஒபிஎஸ் மிக மோசமான மனிதனாக வெளிப்படையாக அம்பலமான தினம் இன்று.  இரண்டு வாரங்களுக்கு முன் மெரினாவில் போராடியவர்களை மிக மூர்க்கமாக தாக்கியவர் தான் இந்த ஓபிஎஸ் என்பதை மறந்துவிட முடியுமா?... மோடியின் ஆதரவு கிடைத்தவுடன் போராடியவர்களையும், குப்பங்களை எரிக்கவும் செய்த கொடுங்கோல் ஆட்சியை செய்தவர் எப்படி யோக்கியவானாக இருக்க முடியும்?  தனக்கு அநீதி நடந்தது என்று புலம்பும் ஓபிஎஸ் ‘கர்ப்பிணி பெண்ணின்’  வயிற்றினை உதைக்கும் காவல்துறை ஏவியவர் என்பது நினைவில் இல்லாமல் போய்விட்டதா?...  அலங்கநல்லூர் மக்கள் தன்னை அனுமதிக்கவில்லை என்பதற்காக கோர தாண்டவம் ஆடிய ஓபிஎஸ் ‘அமைதியானவர், பண்பானவர், சாதுவானவர்’  என்று சுயபுத்தி உள்ள எவராவது சொல்வார்களா?. சசிகலாவை எதிர்ப்பதற்காக ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது தற்கொலைக்கு சமம்.

 அடிமை குணம் கொண்டவர்கள் பலமான அதிகார மையத்தை நோக்கியே நகர்வார்கள். சசி-மோடி எனும் இரண்டு மையத்தில் மோடியே தன்னுடைய சுரண்டல் அரசியலுக்கு பயன்படக் கூடியவர் என்று தேர்ந்தெடுத்தவர் ஓபிஎஸ்.... சசிகலா எவ்வளவு தூரம் மோசமான சுரண்டலுக்கு சொந்தக்காரரோ அதில் சற்றும் குறைவில்லாத சுரண்டலை நடத்த விரும்புபவர் ஓபிஎஸ்.

தனக்கு மாஸ்டராக வருபவர் தமிழர் நல விரோதியா, மதவெறியனா, கொலைகாரனா என்பதெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. இதே அரசியல் நிலை தான் சசிகலாவிற்கும் இருக்க முடியும். தங்களது சுரண்டலை நடத்த அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்தை காப்பதற்கு அவர்கள் எவருடனும் கைகோர்ப்பார்கள்....

இருவரில் சசிகலாவின் சுரண்டல் ராஜ்ஜியம் டில்லி சுல்தானின் அதிகாரத்திற்கு முழுவதுமாக அடிபணியாததாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் ஜெயாவோடு இணைந்து செய்த சுரண்டல் ராஜ்ஜியத்தை, சாராய ராஜ்ஜியத்தை விரிவாக்குவார். மக்கள் சொத்தை மேலும் அதிகமாக கொள்ளை அடிப்பார்.   இதே போன்றதொரு தனித்த சுரண்டல் ராஜ்ஜியத்தை தனக்கு சுயமாக அமைத்துக் கொள்ள முடியாததால் மோடியின் கைத்தடியாக ஓபிஎஸ் மாறி இருக்கிறார்.

’சசிகலாவின் கூட்டம்’ ஏற்கனவே ஒரு சுரண்டல் ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.  இதே போன்று தனக்கும் ஒரு சுரண்டல் கும்பலை  உருவாக்காமல், தமிழகத்தில் தனக்கான அரசியல் அதிகாரத்தை பெற முடியாது என நினைப்பவர் ஓபிஎஸ். இந்த சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை அவராக அமைத்துக்கொள்ள இயலாது. மாறாக பாஜக-ஆர்.எஸ்.எஸ் உதவியைக் கொண்டே அவர் அமைப்பார். இப்படியான சுரண்டல் ராஜ்ஜியம் வெறும் குண்டர் படையாக இருக்காது , மாறாக ஆர்.எஸ்.எஸ் பிற மாநிலங்களில் உருவாக்கி வைத்திருக்கும் மாஃபியாவாக -ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ராஜ்ஜியமாக- இருக்கும். அதாவது அருவாள்கொண்டு பேசிய அரசியல், இனி  துப்பாக்கியால் பேசும் வகையில் சூழலை மாற்றி எழுதினாலும் ஆச்சரியமில்லை.

ஆக, இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை ஆதரிக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தமிழகத்தின் எதிர்காலத்தை இருண்ட குழிக்குள் தள்ளுகிறீர்கள் என்று அர்த்தம். இந்த விசயத்தில் பிற தேர்தல் கட்சிகள் தவறு இழைக்கலாம். பொதுச்சமூகமாக இருப்பவர்கள் மிகக்கவனமாக இரண்டு தீயசக்திகளை புறக்கணிப்பது மிக அவசியம். அதே நேரம் இந்த கூத்துகளுக்கும், அசிங்கங்களுக்கும் பின்னால் இயங்கும் பாஜகவை-மோடியை-ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டாமல் தமிழகம் நிம்மதியாக வாழமுடியாது. இந்த கட்சிகளை நம்பியோ, ஆட்சியை நம்பியோ நாம் இதுவரை வாழ்ந்ததில்லை, வாழப்போவதும் இல்லை எனும் போது இரண்டு குண்டர் கூட்டங்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் யாரோ ஒருவர் பக்கம் நிற்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமம்.

அதே சமயத்தில் பாஜக-மோடி கும்பல் அருணாச்சல பிரதேசத்தில் செய்த சனநாயக விரோத கட்சி உடைப்புகள்,  ஆட்சி கவிழ்ப்புகள், பீகாரில்  ’ஜிதன் ராம் மான்ஜி’ எனும் டம்மி முதல்வரை நிதிஸ்குமாரிடமிருந்து பிரித்து நடத்திய நாடகம் போன்றவற்றை தமிழகத்திலும் நடத்திக்கொண்டிருக்கிறது  பாஜக-மோடி கும்பல்....

 டில்லியிலிருந்து தமிழகத்தில் தனது அடிமை ஆட்சியை நிறுவ நினைக்கும் சாத்தான் ’சுல்தானுக்கு’ என்ன பதில் சொல்லப் போகிறது தமிழகம் ?. இந்த சாத்தான்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதற்குரிய அரங்கத்தை மிக நேர்த்தியாக நடத்துகிறார்கள்.  சமூக ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் ஆகியவற்றைக் கொண்டு பாஜக தனக்கான கருத்தியலையும், தனது அடிமைக்கான ஆதரவையும் வளர்த்துக்கொண்டிருக்கிறது  பாஜக.

'காவேரியை, ஜல்லிக்கட்டை, மீன்பிடி உரிமையை’ மறுத்த பாஜக தமிழகத்தினை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. சசிகலாவை அவருடைய அதிகாரவெறி, சுரண்டல், ஊழல், சாராய ராஜ்ஜியம் என்பதன் அடிப்படையில் எதிர்க்காமல்-அம்பலப்படுத்தாமல், ‘வேலைக்காரி’ என்று உயர்சாதி புத்தியில் விமர்சனத்தை முன்வைப்பதன் பின்னால் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல் இயங்குவதை மறுக்க முடியுமா?..  இந்த இரண்டு தீய சக்திகளையும் விரட்டவேண்டுமென்று பேசுவதே இன்றய அரசியல் தேவை.

’ஓபிஎஸ் வடிவில்’ மோடி பேசியிருக்கிறார் என்பதே மிக முக்கியம்.


No comments:

Post a Comment