கூசவில்லையா உங்களுக்கு?: லாரன்ஸ், ஆர்ஜே பாலாஜி, ஆதிக்கு சில கேள்விகள்….
ராகவா லாரன்ஸ்க்கு வணக்கம்…
இணையத்தில் மிகவும் கொச்சைப் படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்று போராளி. ஆனால் அதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியும். அடிவாங்கும், தலை பிளக்கும், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உயிர் கொடையளிக்கும் போராளியாக இருப்பதெல்லாம் ஒரு ‘நிலை’. அதுவொரு வாழ்முறை. கன்னத்தில் விழும் அறைகளை, அடி வயிற்று உதைகளை, நம் ரத்தம் வடிந்து வாய்க்குள் நுழையும்போது அந்த சுவை…. நம்மை காட்டேரியாகக் கூட நினைக்க வைக்கும்.
ஆனால் ‘இது நம் மக்களுக்காக…’ என்று நினைக்கும்போது புல்லரிக்கும் பாருங்கள். அந்த உணர்வுக்கு இதுவரை பொருத்தமான பெயரே சூட்டப்படவில்லை. அதை விடவும் ஒரு அற்புத நிலை உண்டு. அது போராளிகளின் தலைவனாக உருவெடுப்பது. அந்த உணர்வு தரும் சுகம் சொர்க்கம்.
சரி… விஷயத்திற்கு வருகிறேன்….
“சினிமா நடிகர்கள் வேண்டாம், அரசியல்வாதிகள் வேண்டாம், தலைமை வேண்டாம்” என்று தொடங்கப்பட்ட போராட்டத்தில், உங்களுக்கு அனுமதி அளிக்கபட்டதற்கு, நீங்கள் செய்து வரும் சமூக சேவையின் மீதான அவர்களது அங்கீகாரம் என்றே எடுத்து கொள்கிறேன். ஆனால், நீங்கள் அமர்ந்திருந்த பின் வரிசையில் இருந்து மெது மெதுவாக முன் நகர்ந்து, சிவப்பு துண்டைப் போட்டு உங்களுக்கென்று ஒரு இடத்தை அங்கு உறுதிபடுத்தினீர்கள் அல்லவா… அங்குதான் நீங்கள் “ச்சீய்…” என்று ஆனீர்கள்.
அதை விடவும், மேடையேறி மாணவர்களை வழிப்படுத்தும் ஒருவனாக, நெறிப்படுத்தும் ஒருவனாக (உங்களை நீங்களே நினைத்துக்கொண்டு) உங்களது தோள்களை உயர்த்தினீர்கள் பாருங்கள். அப்போதுதான் உங்களின் மீது ஒவ்வாமை ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் உங்களின் பங்கு என்ன லாரன்ஸ்? ஜல்லிக்கட்டு பற்றி என்றைக்காவது ஏதாவது ஒரு வார்த்தை பேசி இருக்கிறீர்களா? ஜல்லிக்கட்டின் பாரம்பரியப் பெருமைகளோ, இல்லை அது மற்ற மக்களின் மீது சுமத்தி இருக்கும் பாரங்களோ ஏதாவது தெரியுமா உங்களுக்கு?. ‘தெரிந்தால்தான் வர வேண்டுமா…?’ என்று கூட நீங்கள் கேட்கலாம். தேவை இல்லைதான்.
போராடும் மக்களுக்குத் துணை நிற்க, எந்த தீர்க்கமான தகவல்களும் தெரிந்திருக்கத் தேவை இல்லைதான். ஆனால் எப்போது, தலைமை ஏற்கத் தயாராகுகிறீர்களோ, அல்லது அந்த ஆசை முளை விடத் தொடங்குகிறதோ அப்போது அது கண்டிப்பாகத் தேவை.
சரி. “நாட்டு மாடுகளை பாதுகாப்பது என்பது முக்கியம், அதற்காகத்தான் போராட்டத்திற்கு வந்தேன்” என்று கூட நீங்கள் சொல்லலாம். நன்று. அப்போதும் நீங்கள் அங்கு தோளோடு தோளாக மட்டும்தானே நின்றிருக்க வேண்டும். ஏன் மேடை? அதுதான் போய்த் தொலையட்டும் என்று விடலாமென்றால், தலைமையின்றித் தத்தளித்து கொண்டிருந்த மாணவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றதை எந்த வகையில் நியாயப்படுத்துவீர்கள் லாரன்ஸ்?
அங்கு கூடி இருந்த மாணவர்கள், அரசியல் அனுபவமில்லாதவர்கள். உணர்ச்சிவேகத்தில் ஒன்று கூடியவர்கள். போலீஸ் தடியடி நடத்தும்போது “வந்தே மாதரம்” என்று கத்தினால், தப்பித்து விடலாம் என்ற ‘வாட்ஸ்அப்” பார்வடுகளை உண்மை என்று நம்பும் ஒரு பகுதி அப்பாவிகள் கூட அங்கு இருந்தார்கள்தான். அவர்கள் உங்களை மேடையேற சொல்வார்கள்தான்.
நடிகர்களுக்கு அனுமதியில்லை என்றவர்கள் நம்மை மேடையேற சொல்கிறார்கள் என்கிறபோது, உங்களுக்கும் அந்த “சே குவேரா” தருணம் தோன்றி இருக்கும். அதை அனுபவிக்கும் விருப்பமும் கூட. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், லட்சகணக்கான அந்த இளம் மனதுகளை வழி நடத்தி செல்லக்கூடிய அரசியல் அறிவோ, அனுபவமோ, அது சார்ந்த அறமோ நமக்கு இருக்கிறதா என்று நினைத்து பார்த்திருக்க வேண்டும் இல்லையா லாரன்ஸ் நீங்கள்?
‘நான் ராயபுரத்துக்காரன்” என்று நீங்கள் உங்கள் புஜங்களை ஏற்றினீர்கள் அல்லவா? அந்த கணத்தில் உங்கள் மீது அவ்வளவு கசப்பு தோன்றியது. “ராயபுரத்துக்காரன், ஹவுசிங் போர்ட்காரன், பீச் ஓரத்தில் வசிப்பவன், மீனவன், லுங்கி கட்டியவன் எல்லாம் ரவுடிப் பயலுக’ என்ற பொது புத்தியின் பிரதிநிதியாக நீங்கள் அங்கு நின்றீர்கள் லாரன்ஸ். அவ்வாறு நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொண்டீர்கள்.
“இந்த போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன்” என்று சொன்ன தருணம் எச்சைத்தனமனது (இது போன்ற வார்தைக்காக மன்னிக்கவும்). தினந்தோறும் சோறு போட்டவர்கள், தேநீர் அளித்தவர்கள், தினந்தோறும் குப்பை அள்ளியவர்கள், பாதுகாப்பு அரணாக நின்றவர்கள் என்று இவர்கள் யாரும் அறிவித்துக்கொண்டா தங்களது அன்பை அந்த மாணவர்களுக்கு அளித்தார்கள்?
“மருத்துவமனை சிகிச்சையில் இருந்து பாதியில் எழுந்து வந்தேன்” என்று அப்ளாஸ் வாங்கினீர்களே? உங்களுக்குத் தெரியுமா “தன் வாழ்நாளில் பெரும்பாதியை , மூத்திரச்சட்டியை தூக்கிக்கொண்டே இந்த தமிழக மக்களுக்காக உழைத்த ஒரு கிழவனை ?. உங்களுக்குத் தெரிந்திருக்காதுதான்.
“அவசர சட்ட வடிவத்தை எங்களிடம் காட்டுங்கள், வழக்கறிஞரிடம் பேசிவிட்டுக் கலைகிறோம்” என்ற சொன்ன மாணவர்கள் மீது போலீஸ் கை வைத்த போது, உங்களின் சே குவேரா வேஷம் என்னானது லாரன்ஸ்? மருத்துவமனைக்குள் முடங்கி விட்டதா ? மூன்று புறமும் வழிகள் அடைக்கப்பட்டு, கரையின் ஓரமாக மாணவர்கள் ஒடுக்கப்பட்டு, எங்கே உணர்ச்சிவசப்பட்டு கடலில் குதித்து விடுவார்களோ…. மற்றொரு தாமிரபரணிப் படுகொலையைக் காண நேர்ந்துவிடுமோ என்று பெரியவர்கள் பதைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
இவை எல்லாவற்றியும் விட மிகக் கேவலம் எது தெரியுமா லாரன்ஸ்? “எங்கள் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு மட்டுமே போராடினார்கள்; ஜல்லிகட்டிருக்கு மட்டுமே போராடினார்கள்” என்று ஊடகங்கள் முன்னால் நீங்கள் முழங்கியதுதான்.
“மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பவன் மாணவனில்லையா?”
“முல்லைப் பெரியாறை பேசுபவன் மாணவனில்லையா?”
“காவிரித் தண்ணீருக்காக குரல் கொடுப்பவன் மாணவனில்லையா?”
தனித்தமிழ்நாடு என்பது தமிழக அரசியல் தோன்றிய காலத்திலிருந்தே பேசப்படும் ஒரு கருத்தாக்கம். அதற்கு குரல் கொடுப்பதால் தேச விரோத சக்தி என்றால், இங்கு “பெரியார்தான்” மிகப்பெரும் தேசவிரோத சக்தி. மறைமலை அடிகளாரும் தேசவிரோத சக்திதான்.
இப்படித் தமிழக அரசியல் குறித்து எதுவுமே தெரியாத உங்களுக்கு, இந்த கோரிக்கைகளை முன் வைத்த தமிழக மாணவர்கள் தேசவிரோத சக்தியாக தெரிகிறார்கள் என்றால், உண்மையில் உங்களுடைய நோக்கத்தைதான் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.
நீங்கள் யாரின் கைக்கூலியாக அங்கு வந்தீர்கள்? காவிகளின் கைக்கூலியாகவா? அதனால்தான் அதிகாரத்தில் இருக்கும் மோடியைக் கேள்வி கேட்கும் மாணவர்களை காட்டி கொடுக்க வேண்டியிருகிறதா?
இந்த கொந்தளிப்புக்குப் பின்னும் உங்களிடம் சொல்வதற்கு ஒன்று உண்டென்றால் அது இதுதான்…’தயவு செய்து தமிழர் நலம் சார்ந்த எந்த விஷயங்களிலும் நீங்கள் தலைமை ஏற்கத் துணியாமல் இருக்கவேண்டும்” என்பது மட்டுமே. ஏனெனில் அது குறைந்த பட்ச அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களுக்கானது. அந்த தகுதியை எட்டுவதற்கு நீண்ட நெடிய உழைப்பு தேவைப்படும். அவ்வாறு வருபவர்கள்தான் ஓடி ஒளிய மாட்டார்கள்.
வணக்கம்.ஆர்ஜே பாலாஜி…
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் லாரன்சையும் உங்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாதுதான். ‘ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என்று நீங்கள் சொல்லவில்லை. ஆனாலும், லாரன்ஸ்க்கு எழுப்பி இருக்கும் கேள்விகள் உங்களுக்கும் பொருந்தும்.
குறைவான வெளிச்சத்தில், வெள்ளை குர்தாவில், மேடை மீது நின்று கை உயர்த்தி பேசுவதால் மட்டுமே நீங்கள் ஒரு கன்னையா குமார் ஆகிவிட முடியாது பாலாஜி. அதற்கு முதலில் சிறிதளவாவது அரசியல் புரிதல் இருக்க வேண்டும்.
அரசியல் என்றாலே திமுக , அதிமுக என்று கட்சிகளை நினைக்கும் உங்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பது குழந்தைகளுக்கும் புரியும். ஆனால், அது உங்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் பெருந்துயரம். உங்களுக்கு அரசியல் தெரியாததை எல்லாம் நாங்கள் ஏன் பெருந்துயரமாக நினைக்கிறோம் என்றால், எங்களின் பிரதிநிதியாக “இந்த வீணாய்ப்போன ஆங்கில ஊடகங்கள்” உங்களைத்தான் நம்புகின்றன. அட நீங்கள் ஒரு “வட சென்னைக்காரன்” என்று ஊடகத்தில் இருக்கும் எனது நண்பன் ஒருவனே நம்பிக்கொண்டிருக்கிறான் எனும்போது, தமிழகர்களைப் பற்றி எதுவுமே தெரியாத வட இந்திய ஊடகங்களை எப்படிக் குறை சொல்ல முடியும்.
பெட்டிக்கடையின் முன்னால் நின்று , மக்களின் பிரதிநிதியாக பேசினால் கூட, மக்களையும் அவர்களின் அரசியலையும் தெரிந்து பேசுங்கள். உங்களின் பார்ப்பனீய கருத்துகளை எங்களின் கருத்துகளாகத் திணிக்காதீர்கள். தலைவனாவதற்கு முக்கியத் தகுதி என்னவென்று தெரியுமா? “காது கொடுத்து கேட்பது”. உத்தரவு போடுவது அல்ல.
கல்லூரி மாணவனாக இல்லாத, அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ஒருவனாகவும் இல்லாத, போராட்டத்தில் ராப்பகலாக கலந்து கொண்டவனாகவும் இல்லாத, இப்படி எதுவுமாகவே இல்லாத உங்களுக்கு “போராட்டம் முடிந்து விட்டது” என்று உத்தரவு போடும் திமிர் எங்கிருந்து வந்தது. கூச வேண்டும் இப்படிச் சொல்வதற்கு. ஆனால், இதைதான் தமிழர்களான நாங்கள் “பார்ப்பனீயக் கொழுப்பு” (ஆஹா உடனே ஜாதியா… என்று வராதீர்கள். பார்ப்பனீயம் என்றால் என்ன என்று அம்பேத்கரைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்) என்று சொல்வோம்.
நீதிபதி ஹரி பரந்தாமன், மாணவர்களிடம் சட்டத்தை விளக்கிக் கொண்டிருக்கும்போது, இடையில் புகுந்து பேச முற்பட்ட உங்களை, அங்கிருந்த மாணவர்கள் அசிங்கப்படுத்தி அனுப்பியது நேரலையாக ஒளிபரப்பப்பட்டபோதும் “கூஸ்பம்ப்ஸ்” என்று எழுதுவதற்கு ஒருவித துணிவு வேண்டும். மானம் சூடு சுரனை அற்ற துணிவு. அது உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு தலைவனாகி விட முடியாதே.
ஆகையால், தலைவன் கனவில் இருந்து வெளிவந்து உங்களின் நடிப்புதொழிலை சற்று சிறப்பாக மேற்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
இசையமைப்பாளர், நடிகர், பாடகர், மாடு வளர்ப்பாளர் என்று பல்முகம் கொண்ட ஆதிக்கு….
‘தேச விரோத சக்திகள்” என்ற பதத்தை முதன்முதலில் ஊடகத்திற்கு கொண்டு வந்து, அதையே போராடியவர்களுக்கு எதிராக இன்று ஊடகங்கள் முதல் காவல்துறை வரை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணி நீங்கள். ஸ்பைக் வைத்த எட்டப்பன் என்று உங்களை சொல்லி காண்ப்பிப்பார்கள் எங்கள் வரும் தலைமுறைக்கு. அவ்வளவுதான் நீங்கள். அப்படியே இருந்து கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது. அதாவது பாதுகாப்பானது. நீங்கள் பிரதிநித்துவப்படுத்தும் இந்தியாவில் அத்தகையவர்களுக்கே பாதுகாப்பு அதிகம்.
நன்றி!
இதைப் பற்றி யோசிக்கும் மனநிலைக்கு வந்திருந்தீர்கள் என்றால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது… உங்களால் கைவிடப்பட்ட மாணவர்களைத், தங்கள் மார்பில் தாங்கிக்கொண்டதால், காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருக்கும் குப்பத்து மக்களுக்காக
உண்மையாக குரல் எழுப்புங்கள். அதுதான் உங்கள் பாவங்களை துடைப்பதற்கான புனித நீர்.
No comments:
Post a Comment