Thursday 26 January 2017

ஜல்லிகட்டு ., மெரினா உருக்கம்.....✏✏


மெரினா உருக்கம்


செத்த நேரம் கொடுத்திருந்தா 
சீமான்னேனு கையெடுத்து கும்பிட்டுருப்போம்
ஒத்த வார்த்தை கேட்டுருந்தா 
உசுரையே கட்டி வந்து போட்டுருப்போம்
அய்யாமாரே, அய்யாமாரே…

ஒங்க ஊட்டு புள்ளை மொகம் தெரியலியோ அடிக்கையிலே
கழுத்து மேல பூட்ச வச்சு தொண்டக்குழி மிதிக்கும் போது
காளை மாட்டு மேல வந்த கரிசனம் போல் துடிக்கலையோ

மச்சா ஒனக்கு கடைசி பொட்டலம்னு சகளை ஒருத்தன் குடுத்து போக
அய்யாமாரே பசில கெடக்கு நமக்கு நாலு வாய் தண்ணி போதும்னு
எடுத்து எடுத்து குடுத்தமங்கோ
தின்ன சோறு கொடலுக்குள்ளே செரிச்சி மலமா எறங்க குள்ள
எங்க குடல உறுவ வந்தே என்ன பாவம் செஞ்சமுங்கோ

ஆறு நாளு பழகிப்புட்டா நாயி கூட கால நக்கும்
சோறா தண்ணியா கெடந்தமெ, 
அம்புட்டும் அய்யாமாரே வேசமுங்களா

சேறு தண்ணி பாக்காம குப்பை கூளம் அள்ளி போட்டோம்
ராவா, பகலா பாக்காம ஒங்க வேளைய நாங்க செஞ்சோம்
கண்ண மூடி தெறக்ககுள்ள கலவரத்தை தூண்டிட்டியளே
மோரா, தயிரான்னு கடையற மாதிரி 
பொம்பளப்புள்ளக மானத்த உறுவி எரிஞ்சிட்டியளே 

பத்த வச்ச பரட்டையெல்லாம் கைய கொட்டி சிரிக்குதுக
வத்திக் குச்சிய தூக்கி போட வலது கையில துணிஞ்சிட்டிக

எதிரியல்லாம் மறஞ்சிப்போயி துரோகி கணக்கை குறிச்சிக்கிட்டோம்
போற பாதை எப்படியிருந்தாலும் 
அய்யாமாரு கண்ணுல படாம வாழ்ந்துக்கறோம்
பயமுன்னுதான் நெனைப்பியே, பாம்புக்கும் அப்படி நெனப்பிருந்துச்சாம்

காலுல விழுந்து கெஞ்சுனோம், கடலுல விழுந்து கெஞ்சுனோம்
கண்ணுல எரக்கத்த காட்டிட்டு. பல்லுல ரெத்தத்தை உறிஞ்சுப்புட்டியளே

கேட்டுக்க அய்யாமாரே கேட்டுக்க..
பெத்த புள்ளை தூங்கிருச்சான்னு கதவ தெறந்து நீ பாப்பே
மத்த புள்ள சாயலிலே செத்த புள்ளையா அது கெடக்கும் 
சோறு போட்ட கையை நெலத்துல ஓங்கி அடிச்சி 
ஒண்ண நிக்க வச்சி கேள்வி கேக்கும்
நம்பி வந்த அண்ணன்மார நாயப்போல அடிச்சிப்போட்டியேன்னனு
கழுத்துல ஏறி கணக்கு கேக்கும்
அப்ப வயித்துல அடிச்சிக்கிட்டு அழுவ 
எங்காத்தா வயிறு பிரசவ வலி ஒனக்கெடுக்கும்
எங்காத்தா மாருல வழிஞ்ச ரெத்தம் ஒன் கண்ணுல வழியும்…

நல்லாருங்க அய்யாமாரே…



No comments:

Post a Comment