உலகில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை “கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டபோது “கடவுள் தேவைப்படுகிறார்” என்று பதில் அளித்தார்.
ஐன்ஸ்டீனின் சில கோட்பாடுகள் மனிதகுலத்தைக் கடவுளை உணர அல்லது கடவுளுக்கு அருகில் கொண்டு செல்ல வைப்பவை.
நான் அடிக்கடி ஜோதிடம் என்பது ஒரு காலவியல் விஞ்ஞானம் என்று எழுதி வருகிறேன். ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட இந்த மாபெரும் கலையில் எதிர்காலம் குறித்த ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வார்கள்.
இந்த மெய்விஞ்ஞானக் கலையினை பரம்பொருள் எனப்படும் பிரபஞ்ச மகாசக்தியிடம் தொடர்பு கொண்டு நமக்கு அருளிய மகரிஷிகள் ஒருவகையில் அந்தக் காலத்தில் இருந்த மெய்ஞான விஞ்ஞானிகள்தான்.
பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் மனிதன் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நவீன விஞ்ஞானம் நம்புகிறது.
“பெரு வெடிப்பு” எனப்படும்- ஒரு சூன்யத்தில் இருந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவிலான ஒரு மகாசக்தி வெடித்துச் சிதறியதால் இந்த பிரபஞ்சம் உருவானது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் ஆய்வில் முன்னேறிக் கொண்டிருப்பதாக நம்பும் மனிதஇனம்,, இந்த மகாவெடிப்பின் முதல் மூன்று நிமிடங்களில் என்ன நடந்தது?.– அதாவது பெருவெடிப்பின் ஆரம்பக்கணங்களில் என்ன நடந்தது என்பதைத்தான் தேடித் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இந்த முதல் நொடியில் என்ன நடந்தது என்பதை மனிதன் உணர்ந்து விட்டால்- அறிந்து விட்டால் நாம் கடவுளைக் கண்டுபிடித்து விட்டதாகத்தான் அர்த்தம். கடவுளைப் பற்றிய இதுபோன்ற ஒரு பேட்டியில்தான் ஐன்ஸ்டீன் “அவர் இருக்கிறாரோ இல்லையோ… தேவைப்படுகிறார்” என்று சொன்னார்.
ஐன்ஸ்டீனின் காலமான சென்ற நூற்றாண்டு வரை பிரபஞ்சத்தில் நீளம், அகலம், உயரம் என மூன்று பரிமாணங்கள்தான் இருக்கின்றன என்று நம்பப்பட்டது.
அதாவது ஒரு உயிருக்கு இடம், வலம், மேலே, கீழே, முன், பின், என மூன்று நிலைகள் இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் ஒரு மனிதன் தனக்கு இடப்புறமாகவோ, வலப்புறமாகவோ, மேலும், கீழுமாகவோ, முன்னும் பின்னுமாகவோ எல்லாத் திசைகளிலும் பயணிக்க முடியும். இதுவே நீளம், அகலம், உயரம் எனும் முப்பரிமாண நிலை.
மனிதகுலத்தைத் திசை திருப்பிய இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ஒரு மனிதன் பயணம் செய்ய முடியுமானால் அவனது வேகத்தைத் பொறுத்து அவன் செல்லும் வாகனத்தினுள் நேரம் சுருங்கும் என்று சொன்னார். இதுவே அவரது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு..
இதை நாம் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நீளம், அகலம், உயரம் என்ற மூன்றுநிலைகளை அடுத்து காலம் என்ற ஒன்றையும் அவர் நான்காவது பரிமாணமாகச் சொன்னார்.
அதிக வேகத்தில்- ஏறக்குறைய ஒளி செல்லும் வேகமான ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்திற்கு அருகில் ஒரு மனிதனால் பயணம் செல்ல முடியுமானால். அவனுக்கு ஒரு மணிநேரம் என்பது ஒரு நிமிடமாகச் சுருங்கும் என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்துக் காட்டினார்.
காலத்திற்கு ஊடாக மிக வேகமாகப் பயணம் செய்யும் ஒருவருக்கு ஒரு மணிநேரம் என்பது ஒரு நிமிடமாக இருக்கும் என்ற இதே தத்துவம், உலகின் மிக மூத்தமதமான எனது மேலான இந்துமதத்தில் அன்றைய ரிஷிகள் எனப்பட்ட நமது மெய்ஞானிகளால் முன்பே உணர்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.
நமது வேதங்களில், நமக்கு ஒருவருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் எனவும், நம்முடைய ஆறுமாதம் அவர்களுக்கு ஒருபகல், இன்னொரு ஆறுமாதம் அவர்களுக்கு ஒரு இரவு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. விண்வெளியில் மிகவேகமாகச் செல்லும் ஒருவருக்கு இப்படி ஒருவருடம் என்பது ஒருநாளாகச் சுருங்குவதற்குச் சாத்தியம் இருக்கிறது என்பதை இப்போது நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
சார்பியல் தத்துவத்தை உலகிற்கு அறிவித்த இதே ஐன்ஸ்டீன், அதிக எடையுள்ள ஒரு பொருளின் அருகில் வரும் ஒளி அதன் ஈர்ப்புவிசையால் நேராகச் செல்லாமல் வளைந்து செல்லும் என்பதையும் சொன்னார். இந்தவிதி இப்போது நாம் பார்க்கும் சில நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. எனினும் இதை அவர் உயிருடன் இருக்கும் வரையில் நிரூபிக்க முடியவில்லை.
ஐன்ஸ்டீன் இறந்து சில வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஒரு பூரண சூரிய கிரகணத்தின் போது சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் நிலைமாறித் தெரிந்தபோது அவரது ஒளிவளைவுக் கொள்கை நிரூபிக்கப்பட்டு உலகமே அவரைக் கொண்டாடியது.
கடவுளைப் பற்றிய புதிர்களை அவிழ்க்கும் அவரது இன்னொரு கோட்பாடு “தியரி ஆப் எவ்ரிதிங்” என்பதாகும். இந்த விதி “பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சத்திற்கும், ஒரு மிகச் சிறிய அணுவிற்கும் அடிப்படையாக இருப்பவைகள் ஒரே கணிதச் சமன்பாட்டில் அடங்கும்” என்று சொல்கிறது.
நமது உன்னத மதம் சொல்லும் “கடவுள் உனக்குள்ளும் இருக்கிறார்” என்பதைப் போன்றதுதான் இது. வேறுவகையில் சற்று இதை விளக்கினால் நமது வேதங்கள் சொல்லும் ஆத்மாக்கள் தத்துவம்தான் இது.
ஐன்ஸ்டீன் அறிவித்த தியரி ஆப் எவ்ரிதிங் தத்துவத்தை நிரூபிக்க முயற்சித்த விஞ்ஞானிகளில் ஒருவரான எட்வர்ட் விட்டன் அவரது ஆய்வுமுடிவுகளை இருபது வருடங்களுக்கு முன் “எம் தியரி” என்ற பெயரில் வெளியிட்டார்.
அதன் சுருக்கம் என்னவெனில், பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்கள் இருப்பதை அறிந்த நாம், ஐன்ஸ்டீனின் காலம் என்கிற நான்காவது பரிமாணத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். தற்போது கிடைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளின்படி மொத்தம் பதினொரு பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும் என்பதே அது.
இந்தப் பரிமாணங்களுக்கும், கடவுளை உணருதலுக்கும் உள்ள தொடர்பை நவீன விஞ்ஞானம் தேடுவதை விளக்க வேண்டுமானால், முதலில் இந்த பரிமாணங்களின் வகையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பரிமாண உயிரையும், இரண்டு பரிமாண உயிரையும் புரிந்து கொள்ள, முதலில் ஒரு நேர்கோட்டையும், அதனை வெட்டிச் செல்லும் ஒரு படுக்கைக் கோட்டையும் ஒரு கூட்டல் குறியினைப் போலக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஒரு நேர்கோட்டில் முன்பின்னாகச் சென்று வாழும் ஒரு பரிமாண உயிரான ஒரு ஆமையால் அந்தக்கோட்டில் மட்டுமே வாழமுடியும், பார்க்க முடியும், உணர முடியும். அதைத்தவிர வேறு எதையும் அது அறியாது. கோட்டுக்கு வெளியில் இன்னொன்று இருப்பதாகச் சொன்னாலும் நம்பாது.
நேர்கோட்டினை வெட்டிச்செல்லும் படுக்கைக்கோட்டில் வாழும் விரைவான, ஆமையை விட அறிவான, இரண்டு பரிமாண உயிரான முயலால் ஆமையைப் பார்க்க முடியும். ஆனால் ஆமையால் முயலைப் பார்க்க முடியாது. இந்த இரண்டு கோடுகளும் இணையும் நடுமத்திப் புள்ளியில் எப்போதாவது முயல் வருமாயின் அப்போது மட்டும் ஆமையால் முயலைப் பார்க்க முடியும்.
இப்போது இந்தக் கூட்டல்குறி போன்ற இரண்டு பரிமாண உயிர் அமைப்புகளின் மையப்புள்ளியில் ஒரு பென்சிலை வைப்போம். அதன் உச்சியில் இவை இரண்டையும் விட விரைவான, இவைகளுக்கு இல்லாத பறக்கும் சக்தியுள்ள மூன்று பரிமாண உயிரான பருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பருந்து இருப்பதை உணரவோ, பார்க்கவோ, ஆமையாலும் முயலாலும் முடியாது. ஏன் இப்படி ஒன்று இருக்கிறது என்பதைக் கூட இவைகள் கற்பனை செய்ய முடியாது.
ஆனால் பருந்து இந்த இரண்டையும் பார்க்க முடியும். அதேபோல கீழே இருக்கும் இரண்டு பரிமாண உயிர்களை இணைக்கும் புள்ளியில் பருந்து வரும்போது மட்டும் பருந்தை மற்ற இரண்டால் பார்க்க முடியும். நாம் இருப்பது இப்போது இந்த பருந்தின் அமைப்பில்தான்.
இந்தக் கூட்டல்குறியையும் அதன் மேல் நிற்கும் பென்சிலையும் சேர்த்தாற் போல் அதன்மேல் ஒரு டப்பாவைக் கவிழ்த்துங்கள். நான்காவது பரிமாண உயிர் அந்த டப்பாவினுள் அடங்கும். இறந்தவர்கள் ஆவிகளாக இருப்பது இந்த அமைப்பில்தான் என்ற கருத்து இப்போது வலுப்பெற்று வருகிறது.
இந்தப் பரிமாணத்தில்- ஆவி வடிவில்- நமது மதம் சொல்வதைபோல சூட்சும உடலுடன் இருக்கும், நம் முன்னோர்களால் நம்மைப் பார்க்க முடியும். ஆனால் அவர்களை நம்மால் பார்க்க முடியாது. அதேநேரத்தில் அவர்கள் அபூர்வமாக பரிமாண மையப்புள்ளியில் வர நேரிடும்போது நம் கண்களுக்கு ஆவிகளாகத் தெரிகிறார்கள்.
நான் முந்திய பாராவில் சொன்னதைப் போல, எப்படி பருந்து இருப்பதை முயல் நம்பாதோ, பருந்தும் முயலும் இருப்பதை ஆமை நம்பாதோ, அதேபோல இதையும் நீங்கள் நம்பச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும்.
இந்த டப்பாவிற்கு மேல் டப்பாவாக நவீன விஞ்ஞானம் சொல்லும் பதினோரு பரிமாணங்கள் எனும் டப்பாக்களை அடுக்கிக் கொண்டே போங்கள். உலகின் உன்னத மதமான, இறப்பிற்குப் பிறகு நாம் என்னவாகிறோம் என்பதில் தெளிந்த கருத்துக்களைக் கொண்ட நமது மேலான இந்துமதத்தின் ஈரேழு பதினான்கு லோகங்களான வைகுண்டம், சிவலோகம் ஆகியவையும் அவற்றின் தலைவர்களான நமது கடவுளர்களும் உங்கள் கண்முன்னே தெரிவார்கள். முன்னோர்களைத் தெய்வமாக வழிபடும் நமது சூட்சுமங்களும் உங்களுக்கு விளங்கும்.
இதுபோன்ற கடவுளைப் பற்றிய ஞானத்திற்கும், விஞ்ஞான அறிவிற்கும் சொந்தமானவர் கேதுபகவான்….!
இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் எவையும் என்னுடையவை அல்ல. அனைத்தும் நவீன விஞ்ஞானிகளால் ஒத்துக் கொள்ளப்பட்டு விஞ்ஞான உண்மையாக இந்த நூற்றாண்டில் அறிவிக்கப் பட்டவை தான். நான் செய்திருப்பதெல்லாம் இந்த விஞ்ஞான உண்மையை நமது மெய்ஞானத்தோடு பொருத்தியதுதான்.
No comments:
Post a Comment